Published : 12 Apr 2025 05:51 PM
Last Updated : 12 Apr 2025 05:51 PM
காஞ்சிபுரம்: அதிகார பலம் மற்றும் பண பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கையைத் தொடர்ந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம், ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த தண்ணீர் பந்தலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைந்த பாஜக கூட்டணி மக்கள் நலன் சார்ந்து செயல்படும். அதிமுக தனது கொள்கைகளை கூட்டணிக்காக என்றும் விட்டுக் கொடுக்காது, கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு.
திமுக பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. பண பலம், அதிகார பலம் என்று மிருக பலத்தோடு இருக்கும் திமுகவை வீழ்த்த கூட்டணி அமைப்பது காலத்தின் கட்டாயம். அதனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். திமுகவில் இருக்கும் அதன் கூட்டணிக் கட்சியினர் கொத்தடிமைகளாக இருந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம், தொழிற்சாலை பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை” என்றார்.
மேலும் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,“நீதியின் உச்சமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும். ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சி காலத்தில் பல்கலை கழகங்களில் முதல்வரே வேந்தராக இருக்க வேண்டுமென சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவுற்ற முற்பட்ட போது அந்த தீர்மானத்தை எதிர்த்தது திமுக.
இன்று முதல்வரின் கோரிக்கை, உச்சநீதி மன்ற தீர்ப்பில் நிறைவேறிவிட்டது என இருமாப்பு கொள்கிறார்கள்.அன்றே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தால், இந்தப் பிரச்சினை இருந்து இருக்காது. திமுகவின் இரட்டை வேட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT