Published : 12 Apr 2025 02:25 PM
Last Updated : 12 Apr 2025 02:25 PM

அம்பேத்கர் பிறந்தநாளில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை: அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில், மொத்தம் ரூ.332.60 கோடி மதிப்பில் 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “ ஏப்ரல் 14 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் பத்து தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், அண்ணல் அம்பேத்கர்பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் தலைமையில் “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.

தொடர்ந்து, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில், முதல்வர், 227 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்கான 18 விடுதிக் கட்டடங்கள், 46 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, 19 சமுதாய நலக்கூடங்கள், 22 கல்லூரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் 1000 பழங்குடியினர் குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 48,436 பயனாளிகளுக்கு 104 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில் மொத்தம் 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 332 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்டடங்களை திறந்து வைத்தும், சிறப்பிக்க உள்ளார்.

சமத்துவ நாள் விழாவில்,தமிழாக்கம் செய்யப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இரண்டு நூல்களையும், வன உரிமைச் சட்டத்திற்கான வரைபடத்தையும் வெளியிட உள்ளார்.” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x