Published : 12 Apr 2025 05:17 AM
Last Updated : 12 Apr 2025 05:17 AM

பெண்கள் குறித்த பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: இந்து மதம், பெண்கள் குறித்த பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை, அன்பகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலியல் பெண் தொழிலாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் என குறிப்பிட்டு அமைச்சர் பொன்முடி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது:

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. : அமைச்சர் பொன்முடியின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்துக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.

பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: பெண்களையும், இந்து மதத்தையும் அவமானப்படுத்திய அமைச்சர் பொன்முடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக பொன்முடியை கட்சிப் பதவியிலிருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: பொறுப்பற்ற பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி பெண்கள் பற்றி ஆபாசமாக, அநாகரிகமாக பேசியதை கண்டிக்கிறோம். நீண்ட அனுபவம் பெற்ற மூத்த அமைச்சராக இருக்கும் ஒருவர் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து கருத்துக்களை பொது கூட்டத்தில் பேசியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இனியும் அமைச்சர் பதவியில் பொன்முடி நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்களை எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்

வி.கே.சசிகலா: அமைச்சர் பேசி 5 நாட்கள் கழித்து கட்சி பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது திமுகவினரின் கண் துடைப்பு நாடகம். அவர் மீது உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x