சர்ச்சை பேச்சு எதிரொலி: பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிபோகிறதா?
சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சைவம், வைணவம், விலைமாதர்கள் என சர்ச்சையாக பேசிய நிலையில் அமைச்சர் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த பதவிக்கு திருச்சி சிவா எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சரான க.பொன்முடி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மகளிர் இலவச பயணத் திட்டம் குறித்து ஓசி பஸ்லதானே போறீங்க என்று பேசியது, தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று கேட்ட பெண்ணிடம், ஓட்டு போட்டது குறித்து கேட்டது, பொது நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாயத்து ஒன்றிய தலைவரிடம் சாதி குறித்து கேட்டது என அவர் மீதான சர்ச்சை பேச்சுகளின் பட்டியல் நீண்டது.
இதற்கிடையில், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை இழந்தார். அதன்பின் 2024-ல் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், மீண்டும் அமைச்சரானார். தொடர்ந்து அவருக்கு வனத்துறை, கதர்த்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில்தான், கடந்த ஏப்.6 அன்று அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் விலைமாது, சைவம், வைணவம் என பேசிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், நேற்று இவரது பேச்சையும் சுட்டிக்காட்டி திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், இந்த கொச்சையான பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கது என தெரிவித்திருந்தார். இதனைதொடர்ந்து, திமுக தலைமை அலுவலகம் சார்பில் கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் பொன்முடி வகித்து வரும் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். வழக்கமாக, இதுபோன்ற கட்சி நடவடிக்கை அறிவிப்புகள் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் வெளியாகும். ஆனால் இந்த அறிவிப்பு ஸ்டாலின் பெயரிலேயே வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த திமுக பொதுக்குழுவில், ‘‘மத்தளத்துக்கு இருபுறமும் அடி என்பது போல் இருக்கிறது என் நிலை. இந்த சூழலில் என்னை மேலும் துன்பப்படுத்துவதுபோல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் யாரிடம் போய் சொல்வது.
நாள்தோறும் நம்மவர்கள் யாரும் எந்த ஒரு புது பிரச்சினையையும் கிளப்பிவிடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் நான் கண் விழிக்கிறேன். சில நேரங்களில் தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. உங்கள் செயல்பாடுகள் சிறுமைப்படுத்துவதுபோல் ஆகிவிடக் கூடாது. பொது இடங்களில் சிலர் நடந்து கொண்டது விமர்சனத்துக்கு உள்ளாகிவிடுகிறது’’ என்று கண்டிப்பான குரலில் தெரிவித்தார்.
ஆனால், அதன் பின்னரும் இதுபோன்ற சர்ச்சை நடவடிக்கைகள் தொடர்ந்த நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘நாவடக்கம் தொடர்பாக பல இடங்களில் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், தொடர்ந்து அவர் பேசியதால் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார். மாநில அளவில் இளைஞர் அணிபோல, மகளிர் அணிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியதையும் இது உணர்த்தியுள்ளது’’ என்றனர்.
அமைச்சர் பதவி பறிப்பா? - தலைமைச் செயலகத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திருச்சி சிவா சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஸ்டாலி்ன் ஆலோசித்தார்.
அப்போது, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த விவகாரத்தைத தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்த பொன்முடி சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
