நயினார் நாகேந்திரனின் அரசியல் பயணம்: பணகுடி நகரச் செயலாளர் முதல் பாஜக மாநிலத் தலைவர் வரை!

நயினார் நாகேந்திரனின் அரசியல் பயணம்: பணகுடி நகரச் செயலாளர் முதல் பாஜக மாநிலத் தலைவர் வரை!
Updated on
2 min read

திருநெல்வேலி: தமிழகத்தில் பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அரசியலில் அவர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளதை அவரது ஆதரவாளர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.

1989 முதல் அதிமுகவில்... - திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே தண்டையார் குளம் என்ற இடத்தை பூர்விகமாக கொண்டவர் நயினார் நாகேந்திரன் (64). முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். 1989-ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் பணகுடி நகர செயலாளர், இளைஞர் அணி செயலாளர், திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில ஜெயலலிதா பேரவையின் செயலாளர், தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் என பல்வேறு கட்சிப் பதவிகளை வகித்தவர்.

மின்சாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர்: 2001-ம் ஆண்டு திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் தொழில் துறை அமைச்சராக பணியாற்றினார். மீண்டும் 2006-ம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.

பாஜகவில் இணைந்தார்: 2016 -ம் ஆண்டு மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களால் அதிமுகவை விட்டு விலகி 2017-ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பாஜகவில் பணியாற்றிய அவருக்கு கட்சியின் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.

பாஜக எம்.எல்.ஏ: 2019-ம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மீண்டும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ஆதரவு கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்திருந்தார். இந்த தேர்தலில் நயினார் நாகேந்திரன் வெற்றிபெற்று தமிழக பாஜக சட்டப்பேரவை குழு தலைவராக இருந்து வருகிறார்.

மாநிலத் தலைவராக தேர்வு: கடந்த 2024 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில்தான் தமிழக பாஜக தலைவராக தற்போது நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆதரவாளர்கள் உற்சாகம்: ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் அவருக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக நயினார் நாகேந்திரன் திகழ்ந்தார். பல்வேறு நிர்வாக, தொழில் துறை கூட்டங்களில் முன்னிலையில் பணியாற்றியவர். பாஜகவில் இருந்தாலும் ஜெயலலிதா எம்ஜிஆர் ஆகியோர் தனது குரு என்று எப்போதும் சொல்லக்கூடியவர். திருநெல்வேலி தொகுதி தேர்தல் களத்தில் மட்டுமின்றி அரசியலிலும் ஏற்ற இறக்கங்களை நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார். தற்போது பாஜகவில் மாநில தலைவர் பொறுப்புக்கு அவர் உயர்ந்துள்ளது அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in