அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க அதிமுக வலியுறுத்தல்

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க அதிமுக வலியுறுத்தல்

Published on

மதுரை: திமுக கட்சிப் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடியை நீக்குவது வெறும் கண்துடைப்பு மட்டுமே என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நீக்க வேண்டும் என்றும் அதிமுக எம்எல்ஏவும் சட்டமன்ற துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், "அமைச்சர் பொன்முடி பெண்களை மட்டும் அவமதிக்கவில்லை, இந்து மதத்தையும் தாக்கியுள்ளார். துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கிய முதல்வரின் முடிவை கடுமையான நடவடிக்கையாகக் கருத முடியாது. அதற்கு பதிலாக, அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் இந்து மதத்தைப் பற்றி மோசமாகப் பேசுவது தி.மு.க மற்றும் அதன் தலைவர்களின் டிஎன்ஏ-வை பிரதிபலிக்கிறது. இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி இருப்பதால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், பொன்முடியை கண்டிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் பொன்முடியின் கருத்துகள், கண்ணியத்தின் அனைத்து வரம்புகளையும் மீறியவை. பெண்கள் மற்றும் இந்து மதம் பற்றி அவர் தவறாகப் பேசுவது இது முதல் முறை அல்ல. மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரின் தீவிர பக்தர்கள் தாங்கள் என்று கூறிக்கொண்டு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் திமுக தலைவர்கள், தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

பொன்முடி அமைச்சராகத் தொடர அனுமதிப்பது, திமுக தலைமைக்கு அவமானகரமானது. பொன்முடி மக்களின் மரியாதையை இழந்துவிட்டார். அவரது பேச்சால் பெண்கள் மிகவும் எரிச்சலடைந்துள்ளனர். அடிப்படை யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க ஸ்டாலின், பொன்முடியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in