Published : 11 Apr 2025 06:10 AM
Last Updated : 11 Apr 2025 06:10 AM
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத், அகில இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வுசெய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பாரதிய பாஷா பரிஷத் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது ரூ..1 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. கொல்கத்தாவில் மே மாதம் 1-ம் தேதி நடைபெறும் விழாவில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இவ்விருது வழங்கப்படும் என்று பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரது ‘சஞ்சாரம்’ நாவலுக்கு 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அவர் தமிழக அரசு விருது, கலைஞர் பொற்கிழி விருது, இலக்கியச் சிந்தனை விருது, தாகூர் இலக்கிய விருது, ஞானவாணி விருது, மாக்சிம் கார்க்கி விருது உட்பட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
அவரது படைப்புகள் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “இந்திய அளவில் புகழ்மிக்க பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் பாராட்டுகள். சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, சாகித்ய அகாடமி விருது, இயல் விருது, கலைஞர் பொற்கிழி விருது உட்பட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப் பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன். தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கும், மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்நோக்குகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT