

சென்னை: சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.
கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் முடிவடைந்த நிலையில், மேல்நிலை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கட்சியின் கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
பேரவை தேர்தலில் முக்கிய பங்காற்றும் பூத் கமிட்டியின் முக்கியத்துவத்தை கட்சியினரிடம் எடுத்துரைத்த தவெக தலைவர் விஜய் விரைவில் பூத் கமிட்டி தொடர்பான மாநாடு நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பூத் கமிட்டி உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று, நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.