

சென்னை: கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 19-ம் தேதி மாலை மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து. அதை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும்’ என்று மேடைதோறும் பொய் வாக்குறுதி அளித்து மாணவர்கள், பெற்றோரின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நடத்தப்பட்ட நாடகத்தின் முதல்கட்டமாக தமிழக சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தனர். 2-ம் கட்டமாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட சுமார் 1 கோடி பேரிடம் தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புவோம் என்று வெற்று விளம்பரம் செய்து, சுமார் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றதாகக் கூறி, அவற்றை சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் காட்சிக்கு வைத்தனர்.
3-ம் கட்டமாக தற்போது சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளனர். இவர்களால் நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்பதை பல காரணிகளுடன் தெரிவித்து, இந்த கூட்டத்தை புறக்கணித்தோம். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு கோரி ஏற்கெனவே ஜெயலலிதா அரசு தொடர்ந்த வழக்கை திமுக அரசு வாபஸ் பெற்றது. அதன்பின்னர் புதிய வழக்கை தாக்கல் செய்தனர்.
இன்று வரை அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் புதிய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வேடிக்கை. நீட் விஷயத்தில் மாணவர்கள், பெற்றோரை ஏமாற்ற இன்னும் எத்தனை நாடகங்களை அரங்கேற்றப் போகிறார்களோ தெரியவில்லை.
கடந்த 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 22 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவர் அணி சார்பில் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 19-ம் தேதி மாலை 6 மணி அளவில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.