Published : 10 Apr 2025 11:42 PM
Last Updated : 10 Apr 2025 11:42 PM
கோயில் திருவிழாக்களில் சாதி பெயர் குறிப்பிடக் கூடாது என்று அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து ஆலய பாதுகாப்புக் குழு மாநிலப் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோயில் திருவிழாக்களில் குறிப்பிட்ட சாதியின் பெயர் மற்றும் சமுதாயக் குழுக்களின் பெயர்கள் குறிப்பிடக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அடிப்படையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் மற்றும் பாபநாசம் சுவாமி கோயில் பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்கள் அச்சிடப்படாது என கோயில் செயல் அலுவலர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனைத்து கோயில் விழாக்களிலும் சாதி, சமுதாயக் குழுக்களின் பெயர்களை பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் பொதுவான உத்தரவு பிறப்பிக்கவில்லை. குறிப்பிட்ட கோயில் திருவிழா வழக்கில் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அனைத்துக் கோயில்களுக்கும் பொருந்தும் என்று தவறாகப் புரிந்துகொண்டு, அறநிலையத் துறை ஆணையர் அனைத்து கோயில் விழாக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
எனவே, அம்பாசமுத்திரம் கோயில் பங்குனித் திருவிழாவில் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறைப்படி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை அச்சிட உத்தரவிட வேண்டும். அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு 4 வாரங்கள் இடைக்காலத் தடை விதித்தும், மனு குறித்து அறநிலையத் துறை ஆணையர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT