ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம்: ராமநாதபுரத்தில் 2000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் | கோப்புப்படம் 
ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் | கோப்புப்படம் 
Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழகத்தில் இரண்டு மாத கால மீன்பிடித் தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது.

தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன்வளத்தை பெருக்கும் நோக்கத்தில், இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது. ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், 2025-ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலான இரண்டு மாத காலங்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை உபயோகப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதன்படி விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கூறிய காலகட்டங்களில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைக்காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் , தொண்டி, எஸ்.பி. பட்டிணம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 2 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மேலும் தடைக்கால நிவாரணத் தொகையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 33 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ 8,000 தடைக்கால நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in