கோவை பள்ளி மாணவி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார் | படங்கள்: ஜெ.மனோகரன்
கோவையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார் | படங்கள்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை: “கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பள்ளியில் மாதவிடாய் காரணமாக மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.54.60 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை இன்று (ஏப்.10) தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: “கோவை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார். அவரின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் ரூ.54.60 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

விநாயகபுரம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் அமைக்கும் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் மைதானம் என்பதால் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மைதானத்தை மேம்படுத்தவும் உதவி செய்வதாக கூறினோம். ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

இந்நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கிறார். கோவை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேர குடிநீர் விநியோகிக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஊரக சாலைகளை மேம்படுத்தும் திட்ட பணிகளுக்கு ரூ.30 கோடி முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். விரைவில் பணிகள் தொடங்கும்.

கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பது எளிதான காரியம் அல்ல. கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பூப்பெய்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டு தேர்வு எழுத வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே மின்தடை ஏற்படாது,” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in