

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மறைவு தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என பிரதமர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: குமரி அனந்தன் சமூகத்துக்காக ஆற்றிய சேவைக்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு காட்டிய ஆர்வத்துக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின்: குமரி மாவட்டத்தில் பிறந்து, காமராஜரின் அடியொற்றி, காங்கிரஸ் இயக்கத்துக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்ட குமரி அனந்தனின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும். அவரது வாழ்வை போற்றி அவருக்கு கடந்த ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கியபோது என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு உறவாடிய அவரது நினைவுகள் என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது. எண்ணற்ற மேடைகளையும் கண்ட அவரது தமிழால் நம் நெஞ்சங்களில் அவர் என்றும் நிறைந்திருப்பார்.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி: தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் உண்மையான வீரரான குமரி அனந்தனின் இடைவிடாத முயற்சியால் நாடாளுமன்ற அரங்குகளில் தமிழ் பேசுவது சாத்தியமானது. இது என்றென்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: காமராஜரால் ஈர்க்கப்பட்டு, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக, எம்எல்ஏவாக, எம்பியாக மிகுந்த அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்தவர் குமரி அனந்தன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், மிகச்சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் இயக்கத்துக்கு அல்லும், பகலும் பாடுபட்டவர் குமரி அனந்தனின் மறைவு ஈடுசெய்யவே முடியாதது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரிய குமரி அனந்தன் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: காமராஜரின் சீடராக வளர்ந்து மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த குமரி அனந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
பாமக நிறுவனர் ராமதாஸ்: குமரி அனந்தனை இயற்கை நம்மிடமிருந்து பிரித்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நாடறிந்த தமிழ் பேச்சாளர் குமரி அனந்தன் ஆற்றிய பணிகள் சரித்திரத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
திக தலைவர் கி.வீரமணி: எவரிடத்திலும் பண்போடும், பாசத்தோடும் பழகும் குமரி அனந்தனின் மறைவு தமிழுலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்ட குமரி அனந்தனின் மறைவு வருத்தம் தருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: நாட்டுப்பற்றும், மக்கள் நலனும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த தேச பக்தரை நாடு இழந்து விட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: அரசியல் மேடைகளில் இலக்கியச் சுவையோடு பேசும் குமரி அனந்தன் ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவு கூரப்படும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: குமரி அனந்தனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில் மிக நீண்ட தூய அரசியல் பொதுவாழ்வுக்கு உரியவரான குமரி அனந்தனுக்கு எனது புகழ் வணக்கம்.
தவெக தலைவர் விஜய்: எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த குமரி அனந்தன் காலமான செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றிய குமரி அனந்தனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: வாழும் காலமெல்லாம் நல்லது செய்தே வாழ்ந்த குமரி அனந்தனின் வழியில் நாடும் நாமும் செல்வோம்.
இவர்களுடன் பாமக தலைவர் அன்புமணி, மனிதநேய மக்கள் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.