எம்.பி மாதேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரி  நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
எம்.பி மாதேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரி  நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

நாமக்கல் எம்.பி.யின் ராஜினாமா கோரும் காங். சிறுபான்மை பிரிவு போஸ்டரால் பரபரப்பு

Published on

நாமக்கல்: வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்தபோது அதை எதிர்த்து ஓட்டுப் போடாத கொ.ம.தே.கவைச் சேர்ந்த நாமக்கல் எம்.பி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்ட திருத்தம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நாமக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி, வி.எஸ்.மாதேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. இதைக்கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் நாமக்கல்லில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், நாமக்கல் எம்.பி, வி.எஸ்.மாதேஸ்வரன், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யும்போது அதனை எதிர்த்து ஓட்டுப்போடவில்லை. மாறாக கூட்டத்தொடரில் பங்கேற்காமல், முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துவிட்டார். எனவே அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்.பி மாதேஸ்வரன் கூறும்போது, “மக்களவையில் வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்த அன்று எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளமுடியவில்லை. அதற்கு இப்படி ஒரு விமர்சனம் வந்தால் நான் என்ன செய்வது?. எனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை டெல்லியில் இருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு உண்மை தெரியும்.

ஒரு சிலர் எனக்கு எதிராக பிரச்சினையை கிளப்புகின்றனர். இஸ்லாமிய மக்களுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டதில்லை. வரும் 13-ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என, அனைத்து முஸ்லிம் ஜாமத்துகளும் என்னை அழைத்துள்ளனர். நானும் கலந்துகொள்ள சம்மதித்துள்ளேன்” என்றார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் கொமதேகவைச் சேர்ந்த மாதேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, எம்.பி மாதேஸ்வரனுக்கு எதிராக நாமக்கல் பகுதி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in