‘அக்ரஹாரத்துக்கு தானமாக தந்த நிலத்தை அழித்தால்...’ - செப்புப் பட்டயத்தில் இடம்பெற்ற தகவல்!

‘அக்ரஹாரத்துக்கு தானமாக தந்த நிலத்தை அழித்தால்...’ - செப்புப் பட்டயத்தில் இடம்பெற்ற தகவல்!
Updated on
1 min read

ராமேசுவரம்: அக்ரஹாரத்துக்கு தானமாக தந்த நிலத்தை அழிப்பவருக்கு, பசுக்களை கொன்ற பாவம் கிடைக்கும்' என்ற தகவல் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் கண்டெடுக்கப்பட்ட கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதி மன்னர் செப்புப்பட்டயத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சம்பத் குமார் தனது பெற்றோர்களான காந்தி, பாண்டீஸ்வரி ஆகியோரிடம் ஒரு பழமையான செப்புப்பட்டையம் இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு கொடுத்த அளித்த தகவலின் பேரில், கடலாடியில் இருந்த பட்டையத்தை அவர் படித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து வே.ராஜகுரு கூறியதாவது: 600 கிராம் எடையும், 17.5 செ.மீ நீளமும், 30.5 செ.மீ அகலமும் கொண்ட பட்டையத்தில் 52 வரிகள் தமிழிலும், இரு வரிகள் கிரந்த எழுத்தில் (சமஸ்கிருதம்). கைப்பிடியில் குமரன் துணை என உள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இதில் சக ஆண்டு 1667, கலியுகம் 4846, தமிழ் ஆண்டு குரோதன, வைகாசி 29-ம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1745. இதில் மன்னர் பெயர் ஸ்ரீகுமார முத்து விசைய ரகுனாதச் சேதுபதி என உள்ளது.

சேது சமஸ்தானத்தின், பாளையம் கிடாத்திருக்கை நாட்டில், சாயல்குடியிலிருக்கும் குமாரமுத்து விசைய ரகுனாத அய்வாய்ப்புலி பெரிய கறுத்துடையார் சேருவைகாரர், சேது மார்க்கம் கடலாடியில், விசைய ரெகுனாதப் பேட்டையில், அக்ரஹாரம் ஏற்படுத்தி அதை ஸ்ரீரங்கத்திலிருக்கும் வெங்கிட்டராம அய்யங்காருக்கு அக்ரஹாரத்துகுப் பிரதிட்டை பண்ணிக் கொடுத்து, தனது காணியாட்சியாய் வருகிற காக்கைகுட்டம் என்ற ஊரை கல்லுங் காவேரி புல்லும் பூமியும் உள்ளவரை சர்வமானியமாக கொடுத்துள்ளார்.

இத்தானத்தை பாதுகாப்பவர்கள் கங்கைக் கரையில் சிவ, விஷ்ணு, பிரம்மா பிரதிஷ்ட்டை, கோடி கன்னியர் தானம், கோதானம், சூரிய, சந்திர கிரகண காலத்தில் பண்ணினால் எந்தப்பலனுண்டோ அதை அனுபவிப்பர். இதற்கு யாராவது தீங்கு செய்தால் கங்கைக் கரையிலே, காராம் பசுவை கொன்ன தோஷத்திலே போவார்கள் எனவும், இதன் சமஸ்கிருதப் பகுதியில் பிறர் கொடுத்ததை பாதுகாத்தால் இரு மடங்கு புண்ணியம். அதை அபகரித்தால் தனது புண்ணியமும் போகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. பரிக்கு நகுலன், கரிக்கு இந்திரன், அனும கேதனன், கெருட கேதனன், சிங்க கேதனன் உள்ளிட்ட மன்னரின் 74 விருதுப் பெயர்கள் இதில் உள்ளன. மானியமாக கொடுக்கப்பட்ட காக்கைகுட்டம் கடலாடி அருகிலுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in