Published : 09 Apr 2025 12:07 PM
Last Updated : 09 Apr 2025 12:07 PM
சென்னை: நாளை மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி, “சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், “பகவான் மகாவீரர் அவதரித்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும், எனது நெஞ்சார்ந்த 'மகாவீரர் ஜெயந்தி' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
பகவான் மகாவீரர் அவர்கள் இளமையிலேயே தனது சுக வாழ்க்கையைத் துறந்து, இயற்கைச் சக்திகளோடு தமது வாழ்க்கை நெறிமுறைகளை இணைத்து, அகிம்சையைப் பின்பற்றி, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்று அற்ற நிலையைக் கடைபிடித்து வாழ்ந்தவர். அறநெறியையும், ஆன்மிக நெறியையும் தவறாது பின்பற்றியவர்.
பகவான் மகாவீரரின் வாழ்வே, அவரது போதனைகளுக்கு எடுத்துக்காட்டாகும். இந்தியா முழுவதும் சமண சமய மக்கள் அனைவரும், அவரது ஆழ்ந்த போதனைகளை மதிக்கும் நிகழ்வுகளில் பயபக்தியுடன் ஈடுபடுவது வழக்கம்.
மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், மக்கள் அனைவரும் பகவான் மகாவீரரின் வாழ்க்கையையும், போதனைகளையும் கடைபிடித்து வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் இனிய 'மகாவீரர் ஜெயந்தி' வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT