Published : 09 Apr 2025 11:46 AM
Last Updated : 09 Apr 2025 11:46 AM

‘தன்னேரில்லா தமிழ் தொண்டர், மாசு மருவற்ற தலைவர்’ - குமரி அனந்தனுக்கு வைகோ புகழஞ்சலி

சென்னை: “நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றும் உரிமையைப் பெற்றதும், தபால் போக்குவரத்துத் துறையில் மணியார்டர் உள்ளிட்ட விண்ணப்பங்கள் தமிழில் இடம் பெற வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றதும் மறைந்த குமரி அனந்தனின் மகத்தான சாதனை. அவர், தன்னேரில்லாத் தமிழ் தொண்டர், மாசு மருவற்றத் தலைவர்.” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், தகைசால் தமிழர், இலக்கிய செல்வர் குமரி அனந்தன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தியாகச்சுடர், பெருந்தலைவர் காமராஜரின் அடியொற்றி அரசியல் பயணத்தைத் தொடங்கிய குமரி அனந்தன் தமிழக அரசியல் களத்தில் தனித்ததோர் இடத்தை பெற்றிருந்தவர். நாடறிந்த நல்ல தமிழ் பேச்சாளர், சீரிய சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர் என பன்முக ஆற்றல் மிக்க தலைவராக திகழ்ந்தவர்.

தமிழ் இலக்கியங்களில் தோய்ந்து, கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் அவர் உரையாற்றும் சொல்லேர் உழவராக திகழ்ந்ததால் தமிழ் உலகம் அவரை ‘இலக்கியச் செல்வர்’ என்று கொண்டாடி மகிழ்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய அரும் பணிகள் சரித்திரத்தில் என்றும் நிலைத்திருக்கும்.

நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றும் உரிமையைப் பெற்றதும், தபால் போக்குவரத்துத் துறையில் மணியார்டர் உள்ளிட்ட விண்ணப்பங்கள் தமிழில் இடம் பெற வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றதும் அவரது மகத்தான சாதனைகள் ஆகும்.

முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என வாழ்நாள் எல்லாம் அதற்காக குரல் கொடுத்தவர்; மது இல்லா தமிழகம் காணவும், நதிகளை இணைக்கவும் கோரிக்கைகளை முன்வைத்து மூன்று முறை தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டு நடைபயண நாயகர் எனும் சிறப்புக்கு உரியவர் ஆனார்.

குமரி அனந்தன், நான் “முழு மதுவிலக்கு எங்கள் இலக்கு” என்று அறிவித்து 2012 டிசம்பர் 12-ம் தேதி நெல்லை மாவட்டம், உவரி கடற்கரையில் இருந்து நடை பயணத்தை தொடங்கிய போது நெஞ்சார வாழ்த்துக்களை தெரிவித்ததை மறக்க முடியாது.

தன்னேரில்லாத் தமிழ் தொண்டர், மாசு மருவற்றத் தலைவர் குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது மகள் சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x