

சென்னை: சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளபடி, டீசல் விலையை ஏன் இதுவரை குறைக்கவில்லை. காஸ் மானியம் மாதம் ரூ.100 கொடுப்பதாக சொன்ன வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு தேர்தலுக்குப் பின் ஒரு பேச்சு என திமுக இரட்டை வேடம் போடுகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் என்ற வாதத்தை எடுத்து வைத்து விலை ஏற்றத்தை நியாயப்படுத்தும் மத்திய அரசு, விலை வீழ்ச்சி ஏற்படும்போது அதை மக்களுக்கு அளிக்காமல் இருப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: சமையல் எரிவாயு விலை உயர்வு மூலம் சுமார் ரூ.7,000 கோடி அளவுக்கும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சிறப்பு கலால் வரியால் சுமார் ரூ.32,000 கோடி அளவுக்குமான சுமையை மத்திய பாஜக அரசு மக்கள் தலையில் சுமத்தியிருக்கிறது. இதற்கு எதிராக வலுவான கண்டன இயக்கங்களை கட்சிகள் அணிகள் நடத்தும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் கொண்டு வரும்போது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த நிலையில், விலையைக் குறைப்பதற்குப் பதிலாக சிலிண்டர் விலை மற்றும் எரிவாயு மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது கொடுங்கோன்மை. தேர்தல் வாக்குறுதிப்படி ரூ.100 மானியத்தை திமுக அரசு வழங்கி பெண்களின் துயர் துடைக்க வேண்டும்.
தவெக தலைவர் விஜய்: கச்சா எண்ணெய் விலை சரிவின் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க சலுகைகளையும் வழங்கி வரும் மத்திய அரசுக்கு தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா, சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாக திமுக வாக்குறுதி அளித்தது. இவ்வாறு மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் மத்திய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும். சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் விலை உயர்வு அமைந்துள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: சமையல் எரிவாயு சிலிண்டரின் தொடர் விலை உயர்வு என்பது இல்லத்தரசிகளை விழி பிதுங்கச் செய்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
வி.கே.சசிகலா: இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். ரூ.100 மானிய வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.