அரசின் திட்டங்கள், 32 லட்சம் வேலைவாய்ப்பால் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதத்தை எட்டியது: தமிழக தொழில்துறை பெருமிதம்

அரசின் திட்டங்கள், 32 லட்சம் வேலைவாய்ப்பால் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதத்தை எட்டியது: தமிழக தொழில்துறை பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், ரூ.10.14 லட்சம் கோடிக்கான முதலீடுகள் மற்றும் 32 லட்சம் வேலைவாய்ப்புகளால், தமிழகம் 9.69 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாக தொழில்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக தொழில்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவீதம் உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவாகும்.

கடந்த 2011-12-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பின்படி 2023-24-ம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024-25-ம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது என மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா காலகட்டத்தில் பல மாநிலங்களில் வளர்ச்சி இறங்கு முகமாக இருந்தன. ஆனால், தமிழகத்தில் மட்டும் வளர்ச்சி ஏறுமுகமாகவே இருந்தது.

இந்தியாவிலேயே, முதலிடமாக தமிழகம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021-ல் பொறுப்பேற்றது முதல் அறிமுகப்படுத்தி நிறைவேற்றி வரும் திட்டங்களே காரணமாகும்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: குறிப்பாக, மகளிருக்கு கட்டணமில்லா ‘விடியல் பயணத் திட்டம்’, கல்லூரி செல்லும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 தரும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 தரும் ‘கலைஞர் மகளிர் உரிமை’ திட்டம், ஐ.நா. அமைப்பு பாராட்டிய ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், ஏழை, எளியோர் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் வழங்கும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் ஆகியவையும்,

‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டம், ‘நான் முதல்வன்’ திட்டம், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், ‘முதல்வரின் முகவரி’ ஆகிய திட்டங்கள் மற்றும் 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் குவிந்த ரூ.10,14,368 கோடி முதலீடுகள், இவற்றின் வாயிலாகப் பெருகும் 32,04,895 வேலைவாய்ப்புகள் ஆகியவையுமே பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவில் முதலிடம் என்ற வெற்றிக்கு அடித்தளங்கள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in