

தூத்துக்குடி: கோடை மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உப்பு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்புத் தொழிலில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிவடைந்தவுடன் உப்பள உரிமையாளர்கள் உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்கினர். ஜனவரி கடைசி வாரம் வரை மழை நீடித்ததால் உப்பளங்களை சீரமைத்து உப்பு உற்பத்தியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியில் தான் புதிய உப்பு வரத் தொடங்கியது.
புதிய உப்பு வரத் தொடங்கிய 2-வது வாரத்திலேயே கோடை மழை குறுக்கீடு காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் பிறகு அவ்வப்போது பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் முழுவீச்சில் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடியில் போதுமான அளவு உப்பு கையிருப்பில் இல்லாததால் விலையும் அதிகரித்துள்ளது.
இதனால் குஜராத் மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் உப்பு கொண்டு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் சரக்கு பெட்டகங்களில் சுமார் 3 ஆயிரம் டன் உப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்து சேர்ந்தது. இதனை தொடர்ந்து மற்றொரு கப்பலில் 35 ஆயிரம் டன் உப்பு குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருப்பதாக உப்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் இருந்து தென் மாநிலங்கள் முழுவதற்கும் உப்பு விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தூத்துக்குடிக்கே குஜராத்தில் இருந்து உப்பு வந்திருப்பது உற்பத்தியாளர்களை கவலையடைய செய்துள்ளது.