Published : 09 Apr 2025 05:09 AM
Last Updated : 09 Apr 2025 05:09 AM

நீதிமன்ற தீர்ப்பு அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும்: திமுக எம்.பி.வில்சன் தகவல்

சென்னை: தமிழக அரசு - ஆளுநர் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக ஆளுநருக்கு மட்டுமின்றி, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்று திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி - தமிழக அரசு இடையிலான வழக்கின் தீ்ர்ப்பு நேற்று வெளியான நிலையில், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, திமுக எம்.பி. வில்சன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு இனி ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அமைச்சரவையின் அறிவுரையின்படி நடந்து கொள்ள வேண்டும். சட்டப்பேரவை மசோதாவை நிறைவேற்றி அனுப்பும்போது, அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்கள் காலம் தாழ்த்தக் கூடாது. ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆளுநர் வேந்தராக இருக்கிறார். அந்த வேந்தர் என்ற பதவியில் உட்கார்ந்து கொண்டு, அந்த பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் உட்பட எல்லா நடவடிக்கைகளையும் அவர் தடுத்துக் கொண்டு வந்தார். ஆகவே, அந்த வேந்தர் பதவியில் நீடிக்கக் கூடாது.

அவரை வெளியேற்றி, அதற்கு பதிலாக மாநில அரசு நியமிப்பவர்களே வேந்தராக இருக்க வேண்டும் என்ற மசோதாக்கள் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு காலம் தாழ்த்தி வந்ததால் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல், கைதிகள் தொடர்பான கோப்புகள் மீதும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதுபோன்று 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்து அவை இன்று முதல் நடைமுறைக்கு வரும்படியாக உத்தரவிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முதல்வர் உட்பட அமைச்சரவையின் அறிவுரைப்படியே நடந்து கொள்ள வேண்டும். அதைமீறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எங்கெல்லாம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவைப்படுகிறதோ, அந்த காலகட்டத்தில்தான் அவருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியதுடன், கால நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூலம் இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களின் சுயஆட்சியை முதல்வர் நிலைநாட்டி இருக்கிறார். ஆளுநர்கள் இடையூறாக இருந்தால், நீதிமன்றத்தை அணுகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறார். இந்த தீர்ப்பு தமிழக ஆளுநருக்கு மட்டுமின்றி, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும்.

இந்த தீர்ப்பின்படி வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டுள்ளார். மசோதாவில் குறிப்பிடப்பட்டவர்கள் தான் வேந்தராக இருக்க முடியும். இந்த தீர்ப்பை எதிர்த்து, மனு போட்டாலும் அதை எதிர்த்து நாங்கள் வாதாடுவோம். ‘நீட்’க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதா மீதான ஒப்புதல் விஷயத்தில் ஆளுநருக்கு எந்த ஆப்ஷனும் கிடையாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அவர் நிச்சயம் ஒப்புதல் தரவேண்டும்.

முதல் முறையாக வரும் மசோதாவைதான் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்ததைக் கூட நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x