கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1.10 லட்சம் கோடி கடன்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1.10 லட்சம் கோடி கடன்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
Updated on
2 min read

சென்னை: கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் நேற்று பேசினர். அதற்கு அத்துறையின் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதில் அளித்துப் பேசியதாவது:

தமிழகம் 9.69 சதவீத வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சத்தை பதிவு செய்து, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது. இதில் கூட்டுறவுத் துறைக்கும் பங்கு உண்டு என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் லாபத்தில் இயங்கி வருகின்றன. அவ்வங்கிகளின் நிகர லாபம் ரூ.304 கோடி ஆகும்.

கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக கடந்த ஆண்டு 18 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.16,410 கோடி பயிர்க்கடன் வழங்கப்படுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த பயிர்க்கடன் ரூ.55,686 கோடி ஆகும். உழவர் கடன் அட்டை திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடனை உரிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டித்தொகை முழுவதையும் அரசே செலுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ரூ.6,660 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 12 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

கூட்டுறவு சங்க தேர்தல்: கூட்டுறவு அமைப்புகளில் தகுதியுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 லட்சம் பேர். அவர்களில் ஆதார் மற்றும் குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் என்று பார்த்தால் 97 லட்சத்து 83 ஆயிரம் பேர் உள்ளனர். எஞ்சியவர்களிடம் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தேவையான விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும். கூட்டுறவு சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பல்வேறு திட்டங்களின் மூலம் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்கப்படும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடனுக்கு விண்ணப்பித்த உடனே கடன் வழங்கப்படும்.

நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்கள் 2 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்ப்படும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 1,000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க தலா ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் இணையவழியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி, இணையவழியில் பல்வேறு கடன்களை பெறும் வசதி, கிரெடிட் கார்டு பெறுவது போன்ற சேவைகள் வழங்கப்படும்.

கூட்டுறவு பண்டக சாலைகளில் இருந்து பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விநியோகம் செய்யும் வகையில் விரைவு வணிக முறை செயல்படுத்தப்படு்ம். சென்னை தீவுத்திடலில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in