

சென்னை: ரயில் ஓட்டுநரின் பணி தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்டி தாமதிக்காமல் ஆய்வு செய்ய வேண்டும் என்று ரயில் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வார ஓய்வு உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ரயில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆய்வு செய்ய பல்வேறு விஷயங்களுக்கான ஒழுங்குமுறை குழுவை ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு அமைத்தது.
இந்நிலையில், ரயில் ஓட்டுநரின் பணி தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, ரயில் ஓட்டுநர்கள் கூறியதாவது: ரயில் ஓட்டுநரின் பணி நேரம், ஓய்வு ஆகிய குறைகளை முக்கிய விஷயமாக இந்த குழு பார்க்கவில்லை. ரயில் ஓட்டுநர் உடல்நலம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கு ரயில் ஓட்டுநர்களின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் (3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது) ரயில் ஓட்டு நரின் பணி தொடர்பாக ஆய்வு செய்யப்படவில்லை. இதை மேற்கொள்ளாமல் ரயில் ஓட்டுநரின் வேலை பளுவை நிர்ணயம் செய்ய முடியாது. இதுதொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்த வேண்டும். கோரிக்கைகள் தொடர்பாக, அகில இந்திய ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரயில்வேக்கு மனு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.