

சென்னை: வட சென்னை பகுதியில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக ரூ.40 கோடி செலவில் 15 இடங்களில் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் நேற்று பேசினர்.
அதைத்தொடர்ந்து, சிஎம்டிஏ தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்தார். பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
சென்னை பிராட்வேயில் உள்ள அரசு பாரதி பெண்கள் கல்லூரி புதிய ஆய்வகங்கள், கூடுதல் வகுப்பறைகளுடன் ரூ.25 கோடி செலவில் மேம்படுத்தப்படும். சென்னையில் 9 அரசு பள்ளிகள் ரூ.25 கோடியிலும், 6 ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் ரூ.5 கோடியிலும் மேம்படுத்தப்படும்.
ரூ.40 கோடி செலவில்.. வடசென்னை பகுதியில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.40 கோடி செலவில் 15 இடங்களில் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும். பிராட்வே பிரகாசம் சாலையில் ரூ.30 கோடி செலவில் அதிநவீன பொது நூலகம் அமைக்கப்படும்.
வடசென்னையில் ரூ.8 கோடியில் பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் குளிர்சாதன வசதி மற்றும் கழிப்பறை வசதிகளுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும்.
சேத்துப்பட்டு, மணலி, ராயபுரம், வியாசர்பாடி, கிண்டி, மதுரவாயல், பெருங்குடி ஆகிய 7 இடங்களில் ரூ.45 கோடியில் பன்னோக்கு மையங்கள் ஏற்படுத்தப்படும்
பெரியார் நகர், ராயபுரம், சைதாப்பேட்டை தாடண்டர் நகர், பல்லாவரம், சித்தாலப்பாக்கம், வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஆகிய 6 இடங்களில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் அமுதம் அங்காடிகள் அமைக்கப்படும். வண்டலூர் கீரப்பாக்கத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.11 கோடியில் உணவு பொருள் கிடங்கு நிறுவப்படும்.
உள்கட்டமைப்பு வசதிகள்: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் திடக்கழிவு மேலாண்மை, கட்டணமில்லா கழிப்பறை வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் ஐயப்பன்தாங்கல், பரணிபுத்தூர், மவுலிவாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் கொளப்பாக்கம், தண்டலம், ஆகிய பகுதிகளில் ரூ.21 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.