

புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு விரோதமான வக்பு சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திமுக எம்.பி. ஆ.ராசா தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “நாடாளுமன்றத்தில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத் திருத்தம், அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது தமிழகத்தில் உள்ள சுமார் 50 லட்சம் முஸ்லிம்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளையும் மீறுவதாகும். எனவே, இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்,” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளன. உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 8 வழக்குகள் வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக சட்டமன்றத்தில், வக்பு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.