

சென்னை: “தமிழகத்துக்கு நிதி தராமல் துரோகம், இந்தியைத் திணித்து துரோகம், தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து துரோகம் என பாஜக வரிசையாக துரோகங்களைச் செய்து சதித்திட்டம் தீட்டி வருகிறது. தமிழக மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி” என்று தமிழக சட்டத்துறை அமைசச்ர் ரகுபதி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு “நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகிகள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், நொந்து போன எதிர்க் கட்சித் தலைவர் வீராவேசமாகக் கருத்து சொல்லியிருக்கிறார்.
தியாகியை விடுங்கள். துரோகியைத் தெரியுமா? ‘தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான்.
அரசியல் அறத்தை அடகு வைத்து விட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் பழனிசாமி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அருகில் கூனி குறுகி நிற்பார். ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார். ஆனால், ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக பாஜகவின் பாதம்தாங்கியாக மாறி ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி. தவழ்ந்து, ஊர்ந்து சென்று நாடகமாடி ஆட்சியைப் பிடித்த பிறகு, சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி.
திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே. சுயநலத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்வார்? எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிகள் ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும். உண்மையில் எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள்தான் அந்தத் தியாகிகள்.
கடந்த 2 ஆண்டுகளாக “பாஜகவுடன் கூட்டணி கிடையாது” என்று சத்தியம் செய்து வந்த பழனிசாமி, இன்று டெல்லி மேலிடத்தின் மிரட்டலுக்குப் பயந்து, சிறைக்கு அஞ்சி, தாங்கள் அடித்த கொள்ளை பணத்தைப் பாதுகாக்க மீண்டும் பாஜக கூட்டணிக்குத் தயாராகி விட்டார். அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் பிரமுகர்களை முறை போட்டுப் போய் பார்த்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான். அவர்களுக்கும் எடப்பாடி துரோகிதான்.
பாஜகவுடன் இதுகாலம் வரையில் இருந்த கள்ளக்கூட்டணி, கரம் பிடிக்கும் கூட்டணியாக மாறப் போவதால், ரத்தத்தின் ரத்தங்களும் மக்களும் நாக்கை பிடுங்கும் வகையில் கேள்வி கேட்பார்கள். அதை மடைமாற்ற திமுக அரசு மீது வதந்திகளை பழனிசாமி பரப்பி வருகிறார்; பாஜகவின் தயவில் அரசியல் வண்டியை ஓட்ட நினைக்கிறார் பழனிசாமி. தனக்கு முதுகெலும்பு இருப்பதே, பாஜகவிற்கு வளைந்து கொடுத்து அடிமை சேவகம் செய்வதற்குத்தான் என மத்திய அரசின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பாஜகவின் பண்ணையடிமைதான் பழனிசாமி.
தனது டெல்லி எஜமானர்களின் ஏவல் படையான அமலாக்கத்துறை தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய ஒரு முகாந்திரமற்ற சோதனையை வைத்துக் கொண்டு, அபத்தமான கேள்வியோடு தனது கோமாளித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. யார் அந்த சார்? என்ற புரளி நாடகம் அம்பலப்பட்ட பிறகு வேறு ஏதேனும் கிடைக்காதா என்று திணறிக் கொண்டிருக்கிறார்.
கள்ளக் கூட்டணியை உறுதி செய்ய டெல்லியில் அமித்ஷாவை பதுங்கிப் பதுங்கி, கார்கள் மாறி மாறி சென்று சந்தித்த கோழை பழனிசாமி, தமிழக முதல்வரைப் பற்றிப் பேசத் திராணியிருக்கிறதா? தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என நீதிமன்றத்திற்கு ஓடிப் போய் தடையாணை வாங்கிய பயந்தாங்கொள்ளி பழனிசாமி பேசுவது அத்தனையும் கேலிக்கூத்துகள்தான்.
தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் துரோகம், இந்தியைத் திணித்து துரோகம், தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து துரோகம் என பாஜக வரிசையாக துரோகங்களைச் செய்து சதித்திட்டம் தீட்டி வருகிறது. கொஞ்சம் கூட வெட்கமின்றி, தமிழக மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி.
இன்றைக்குத் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்து, நாட்டின் கூட்டாட்சி கோட்பாட்டை உயர்த்திப்பிடித்து வரும் தமிழக முதல்வரை இன்று உலக அளவில் ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. அதைப் பொறுக்க முடியாமல், தனது பதவி நலனுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ‘பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி டெல்லி எஜமானர்களின் ஆணையின் படி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகமும் மக்களிடம் அம்பலப்பட்டு பழனிசாமி அவமானப்படுவது உறுதி” என்று அவர் கூறியுள்ளார்.
எடப்பாடி கூறியது என்ன? - முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “யார் அந்த தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாத முதல்வர் ஸ்டாலின், சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார். சிட்டி பாபுவில் ஆரம்பித்து, தா.கிருட்டிணன், சாதிக் பாட்சா என பல்வேறு தியாகிகளை வரிசையாக கூற முடியும். உங்கள் குடும்பத்தில் செல்வாக்கு யாருக்கு அதிகம் என்ற போட்டியில் எரித்து கொல்லப்பட்டு, தியாகிகள் ஆக்கப்பட்ட அப்பாவி தினகரன் ஊழியர்களை நினைவிருக்கிறதா?
இவ்வளவு ஏன், கனவிலும் திமுகவில் தலைவராகவோ, முதல்வராகவோ உங்கள் குடும்பத்தை மீறி யாரும் எந்த பதவியிலும் வர முடியாது என தெரிந்தும், நீண்ட நாட்களாக தாங்கள் சுரண்டபடுகிறோம், கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறோம் என அறிந்தும், திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள். ஆனால், நாங்கள் கேட்ட கேள்வி அதுவல்ல.
டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை சொல்லியிருக்கிறதே, அந்த ஊழலுக்கு பொறுப்பான அந்த தியாகி யார் என்று தான் கேட்கிறோம். அவருக்கு தியாகி பட்டம் கொடுத்த நீங்கள் தான் அந்த கேள்விக்கு முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும். யார் அந்த தியாகி? உங்கள் பதிலுக்கு மக்களுடன் இணைந்து காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.