Published : 06 Apr 2025 03:21 PM
Last Updated : 06 Apr 2025 03:21 PM
சென்னை: “தருமபுரி காட்டில் வனத்துறையினாரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொங்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். கொத்தனாராக பணி செய்து வந்த செந்திலையும், அவரது தந்தை கோவிந்தராஜ், சகோதரர் சக்தி ஆகியோரை கடந்த மார்ச் 17-ம் தேதி பென்னாகரம் வனக்காவல் நிலையத்திற்கு வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவர்களின் குடும்பத்தினர் இது குறித்து தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 19-ம் தேதி புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து சக்தியை அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.
அதேநேரத்தில், ஏமனூர் வனப்பகுதியில் யானை ஒன்று கொல்லப்பட்டு, அதன் தந்தம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், செந்திலை அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைக்கவில்லை. யானை கொல்லப்பட்ட இடத்தில் விசாரிப்பதற்காக கைவிலங்குடன் அழைத்துச் சென்ற போது அவர் தப்பி ஓடிவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
அதன்பின், 15 நாட்கள் கழித்து கொங்காரப்பட்டி வனப்பகுதியில் செந்திலின் உடல் கிடைத்ததாக வனத்துறையினர் கூறியுள்ளனர். அவர் வனத்துறையினரால் கொடுமைப்படுத்தி பின்னர், சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், வனத்துறையோ, தங்களின் பிடியிலிருந்து தப்பி ஓடிய செந்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக விளக்கமளித்திருக்கிறது. வனத்துறையினர் தெரிவித்திருக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
செந்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நாள் முதல் நடந்த நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது அவர் வனத்துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாகவே உள்ளது. செந்திலின் மர்ம மரணம் குறித்து கீழ்க்கண்ட சந்தேகங்கள் எழுகின்றன.
இந்த வினாக்கள் எதற்கும் விடையளிக்க வனத்துறை மறுக்கிறது. இது தொடர்பாக காவல்துறையில் செந்திலின் மனைவி சித்ரா புகார் அளித்துள்ள போதிலும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. வனத்துறை அதிகாரிகள் குறித்த பல ரகசியங்கள் செந்திலுக்குத் தெரியும் என்றும், அவற்றை செந்தில் வெளியில் கூறி விடுவார் என்ற அச்சத்தில் தான் அவரை வனத்துறையினர் படுகொலை செய்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகின்றனர். வனத்துறையினரின் இந்த நாடகத்துக்கு தருமபுரி மாவட்ட காவல்துறையினரும் துணை போவதை மன்னிக்கவே முடியாது.
கடந்த 2020-ம் ஆண்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் எவ்வாறு விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டார்களோ, அதேபோல் தான் செந்திலும் வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கை தமிழக காவல்துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கைப் போலவே இந்த வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். கொல்லப்பட்ட செந்திலின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT