

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிகவிலைக்கு விற்பனை செய்ததாக கேரளாவைச் சேர்ந்தவர் உள்பட 11 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உள்பட பல்வேறு மாநில நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை சிலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, ஐபிஎல் டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதில், தொடர்புடைய பட்டாபிராம் அரவிந்த் (24), ஆலந்தூர் ரூபேஷ் (24), ஆவடி விஷ்ணு (19), கொளத்தூர் சேது ரோஷன் (20), திருவல்லிக்கேணி சந்திரன் (52), அசோக்நகர் ஶ்ரீராம் (25), கும்மிடிப்பூண்டி அரவிந்த் (20), திருவொற்றியூர் சாலமன் (19), கேரள மாநிலத்தைச் சேர்ந்த வினித் (28), சேப்பாக்கம் கார்த்திக் (23), கோட்டூர் மணிகண்டன் (26) ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் முகவர்களாக செயல்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து கள்ளச் சந்தை மூலம் விற்பனை செய்ய வைத்திருந்த 34 ஐபிஎல் டிக்கெட்டுகள் மற்றும் ரூ.30,600 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.