

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து, ரூ.8,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக ராமநவமி நாளான இன்று (ஏப். 6) பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு இன்று காலை மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு பகல் 11.45 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடைக்குச் செல்கிறார். பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதுடன், ராமேசுவரம்-தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையையும் தொடங்கிவைக்கிறார். பின்னர் செங்குத்து தூக்குப் பாலம் தூக்கப்பட்டு, கடலோரக் காவல் படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் புதிய பாலத்தை கடந்து செல்வதை பிரதமர் பார்வையிடுகிறார்.
பகல் 12.30 மணியளவில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்கிறார். 1.30 மணியளவில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் பிரதமர் உரையாற்றுகிறார். அப்போது, ரூ.8,300 கோடி மதிப்பிலான வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை நான்கு வழிச் சாலை, விழுப்புரம்-புதுச்சேரி நான்கு வழிச் சாலை, பூண்டியன்குப்பம்-சட்டநாதபுரம் நான்கு வழிச் சாலை, சோழபுரம்-தஞ்சாவூர் நான்கு வழிச் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், நிறைவடைந்த பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் நவாஸ்கனி, தர்மர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறனர்.
பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ராமேசுவரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல் பகுதியில் இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
பிரார்த்தனை செய்ய உள்ளேன்... பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில், "புனிதமான ராமநவமி நாளில் தமிழகத்தில் எனது சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். பாம்பன் புதிய ரயில் பாலம் திறந்து வைக்கப்பட உள்ளது. ராமநாத சுவாமி ஆலயத்தில் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தொடங்கிவைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.