

வடசென்னை பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
வடசென்னை பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க செம்பியம் காவல் ஆய்வாளர் தீபக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஒரு பெண்ணிடம் செயினை பறித்துவிட்டு தப்பி சென்ற கொள்ளையர்களின் படம் ஒரு வீட்டின் முன்பக்கத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் வேளச்சேரி அருகே கன்னிகா புரத்தை சேர்ந்த முருகன்(30), அதே பகுதியை சேர்ந்த பிரபு(25), ஓட்டேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசிக்குமார்(24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. செம்பியம், திருவிக நகர், பெரவள்ளூர் உட்பட வடசென்னை பகுதிகளில் 12 செயின் பறிப்பு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பிருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 42 சவரன் திருட்டு நகைகளும், 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.