

சென்னை: வீட்டு வசதி வாரியத்தின் மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீ்ட்டில், ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு சென்னை திருவான்மியூரில் வீட்டுமனைகளை ஒதுக்கி உத்தரவிட்டிருந்தார்.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக, அமைச்சர் பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2013-ல் அதிமுக ஆட்சியின்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியசாமி மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அமைச்சர் பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
அமைச்சராக பதவி வகித்தவர் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என்ற நிலையில், சட்டப்பேரவை தலைவரிடம் அனுமதி பெறப்பட்டது ஏற்புடையது அல்ல’’ என்று வாதிட்டார். இதையடுத்து, அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.