Published : 05 Apr 2025 12:07 AM
Last Updated : 05 Apr 2025 12:07 AM
பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக பாஜக வரவேற்கிறது. இந்த நடவடிக்கை ஏழை இஸ்லாமிய சொந்தங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். நெல்லையில் வக்பு வாரிய சொத்தை திமுகவைச் சேர்ந்தவர் அபகரித்ததை எதிர்த்துக் கேள்விகேட்ட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டார். பல வக்பு சொத்துகளை திமுக அபகரித்து வைத்துள்ளது. இதுபோன்ற பல விவகாரங்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
மருதமலை கோயில் கும்பாபிஷேக விழாவை திமுக மாநாடா என்ற சந்தேகிக்கும் வகையில் நடத்தியுள்ளனர். அங்கு முருக பக்தர்களை அவமானப்படுத்தி உள்ளனர். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
கட்சியின் மாநிலத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். ஆனால், புதிய மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை. கட்சி மேலும் வளர வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் எப்போதும் விவசாயியின் மகனாக இருப்பேன். என் பணி தொடரும். ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகளில் சமரசம் கிடையாது.
‘நீட்’ தேர்வு தொடர்பாக முதல்வரின் நாடகம் முடிந்துவிட்டது. இனி அவர் அடுத்த நாடகத்தை தொடங்கலாம். நீட் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்தை நாட மாட்டார்கள். திமுக அமைச்சர்களில் 13 பேர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகள் நீதிமன்றங்களில் நடக்கின்றன. இந்த வழக்குகளை பக்கத்து மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று முதல்வர் கேட்கலாமே? இதை விடுத்து டாஸ்மாக் வழக்கை மட்டும் மாற்றச் சொல்வது ஏன்? எனக்கு அமலாக்கத் துறை மீது அதிக நம்பிக்கை உள்ளது. தவறு செய்தவர்களை கைது செய்வது அவசியம். மக்களின் வரிப்பணத்தை நேர்மையான முறையில் அரசிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT