அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீட்டு வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப்படம்
அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போது வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட்டின் மனைவி பரவீன் உள்ளிட்ட சிலருக்கு திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுரஅடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுரஅடி கொண்ட வீட்டுமனைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறி அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்ளீிட்ட 7 பேர் மீது கடந்த 2013-ல் அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப்பதியப்பட்டது.

அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை எம்.பி.,எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது.

அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்றும், அமைச்சராக பதவி வகித்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் மட்டுமே அனுமதியளிக்க முடியும் என்ற நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி வழங்கியிருப்பது ஏற்புடையதல்ல,” என வாதிட்டார். இதையடுத்து, அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in