ரூ.25 கோடியில் 7 இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

ரூ.25 கோடியில் 7 இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Updated on
2 min read

சென்னை: வேளாண் துறை சார்பில் ரூ.25 கோடியில் 7 இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற வேளாண் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்ததாவது:

வேளாண் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பேசினர். இருவரும் விவசாயத்தின் மீது அக்கறை இருக்கிறதா, என்ன செய்தீர்கள் என்று கேட்டனர். அதிமுக ஆட்சியின் சாதனை விவசாயிகள் தற்கொலை தான்.

அவர்கள் ஆட்சியில் 47 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதற்காக அவர்களின் அரசே, ரூ.2.76 கோடி நிவாரணத்தை வழங்கியுள்ளது. இவர்கள் எங்கள் அரசு என்ன செய்தது என கேட்கின்றனர். எங்கள் ஆட்சியில் வேளாண் துறைக்கு தாராளமாக முதல்வர் நிதி ஒதுக்கியதால் எண்ணிலடங்காத சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தென்னை சாகுபடி பாதிப்பு தொடர்பாக பொள்ளாச்சி ஜெயராமன் பேசியுள்ளார். தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. கடந்த ஆட்சியில் தென்னைக்கு என்று எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு 5 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: வேளாண் துறையின் அனைத்துத் திட்டங்களையும் ஆலோசனைகளையும், தரமான வேளாண் இடுபொருட்களையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்றுப் பயனடைய ஏதுவாக 7 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், ரூ.25 கோடியில் அமைக்கப்படும்.

ரசாயன உரங்களின் தரத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்குத் தரமான உரங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய திருநெல்வேலி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 உரக் கட்டுப்பாட்டு ஆய்வகம் ரூ.6 கோடியில் அமைக்கப்படும்.

வேளாண் விளைபொருள்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பை குறைத்து சேமிப்புக் காலத்தை நீட்டிக்க திசையன்விளை, மானாமதுரையில் குளிர்பதனக் கிடங்கு வசதிகள் ரூ.4 கோடியில் அமைக்கப்படும்.

வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்து, வட்டார அளவில் விவசாயிகளுக்கு சேவை வழங்க ரூ.3.30 கோடியில் வேளாண் இயந்திரக் கூடாரங்கள் 15 வட்டாரங்களில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 386 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் ரூ.2.50 கோடியில் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் மின்னணு வருகைப் பதிவேடு இயந்திரங்கள் நிறுவப்படும் என்பன உள்ளிட்ட 22 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து, "தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல் கரும்புக்கு டன் ஒன்றுக்கு, ரூ.4 ஆயிரம், நெல் குவிண்டாலுக்கு, ரூ.2,500 இந்த ஆண்டு வழங்கப்படுமா?" என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "நெல்லுக்கு ரூ.50 தான் குறைவாக உள்ளது. வரும் செப்டம்பரில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக வழங்கப்படும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம், அடுத்த சீசனில் வழங்கப்படும்" என்று பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in