தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத வகையில், வழக்கத்துக்கு மாறாக சென்னை, புறநகர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் சாரல் மழையும், சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூரலும் விழுந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் தணிந்து, குளிச்சியாக ரம்மியமான சூழல் நிலவியது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7, 8 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரியில் 11 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய இடங்களில் தலா 9 செமீ, மதுரை விமான நிலையத்தில் 7 செமீ, விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம், சிவகங்கை ஆகிய இடங்களில் தலா 6 செமீ, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, மதுரை மாவட்டம் சோழவந்தான், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in