Last Updated : 27 Jul, 2018 09:45 AM

 

Published : 27 Jul 2018 09:45 AM
Last Updated : 27 Jul 2018 09:45 AM

சிங்கப்பூரில் உள்ளதுபோல நாட்டிலே முதன்முறையாக கோயம்பேடு, கொடுங்கையூரில் ரூ.631 கோடியில் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்- குடிநீராகவும் பயன்படுத்தும் அளவுக்கு தூய்மைப்படுத்தப்படும்

இந்தியாவிலே முதன்முறையாக சிங்கப்பூரைப் போல சென்னையில் எதிர் சவ்வூடு பரவல் முறை மூலம் கழிவுநீர் அதிக அளவு சுத்திகரிக்கப்படவுள்ளது. இதற்காக கோயம்பேடு, கொடுங்கையூரில் ரூ.631 கோடியில் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படுகின்றன.

தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தும் முறை உலகில் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. சிங்கப்பூரில் கழிவுநீர் நன்கு சுத்திகரிக்கப்பட்டு குடி நீர் உள்ளிட்ட அனைத்து தேவை களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கழிவுநீர் சுத்திகரிக் கப்பட்டு தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரையில் கழிவுநீர் சுத்திகரிக் கப்படுகிறது.

சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் 1989-ம் ஆண்டு முதல் கழிவுநீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு விற்று வருகிறது. 2000-ம் ஆண்டு வரை கழிவுநீர் அப்படியே மின் உற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டது. அந்த நிறுவனம் மூடப்பட்ட பிறகு கழிவுநீரை அப் படியே வாங்கி சுத்திகரித்து பயன் படுத்துவதற்கு எந்த தொழிற் சாலையும் முன்வரவில்லை.

அதனால் சென்னையில் கொடுங்கையூர், கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு 2-ம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சிபிசிஎல்., எம்எப்எல், எம்பிஎல் ஆகிய தொழிற்சாலைகளுக்கு விற்கப்பட்டது. தற்போது இந்த தொழிற்சாலைகளுக்கு தினமும் 33 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு கிலோ லிட்டர் 18 ரூபாய் 40 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தினமும் மொத்தம் 1200 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கிடைக்கிறது. சென்னையில் மட் டும் நாள்தோறும் 540 மில்லியன் லிட்டர் கிடைக்கின்றது. கழிவுநீர் நிறைய கிடைப்பதால் இதை நன்கு சுத்திகரித்து குடிநீராகக்கூட பயன்படுத்தலாம்.

ஆனால், கழிவுநீரை சுத்தி கரித்து குடிநீராகக் குடிக்க மக்கள் மனதளவில் தயாராக வில்லை. அதனால் கழிவு நீரை சுத்திகரித்து தொழிற் சாலை களுக்கு விற்கிறோம். கழிவுநீர் ஒரு கிலோ லிட்டர் 3 ரூபாய்க்கும், சுத்திகரிக்கப்பட்ட 2-ம் நிலை தண்ணீர் ஒரு கிலோ லிட்டர் 18 ரூபாய் 40 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர் சவ்வூடு பரவல் முறை மூலம் கழிவுநீரைச் சுத்திகரித்து 3-ம் நிலை சுத்தி கரிக்கப்பட்ட தண்ணீரை விற்கவுள் ளோம். இதற்காக கோயம்பேட்டில் 9 ஏக்கரில் ரூ.396 கோடியிலும், கொடுங்கையூரில் 9 ஏக்கரில் ரூ.235 கோடியிலும் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படுகின்றன. இதுவரை 50 சதவீத பணிகள் முடிந்துள் ளன.

இவற்றிற்காக அகமதாபாத், நொய்டா, ராஜ்கோட், புனே ஆகிய இடங்களில் நவீன உபகரணங்கள் வந்துள்ளன. இதுதவிர, ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து அதிநவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இதுபோன்ற எதிர் சவ்வூடு பரவல் மூலம் கழிவுநீர் சுத்கரிகரிப்பு நிலையம் சூரத்தில் உள்ளது. ஆனால் அதன் திறன் தினமும் 18 மில்லியன் லிட்டர்தான்.

கோயம்பேடு, கொடுங்கை யூரில் கட்டப்படும் அதிநவீன சுத்திகரிப்பு நிலையங்களில் தலா 45 மில்லியன் லிட்டர் வீதம் தினமும் 90 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க முடியும். அந்த அடிப்படையில் இந்தியாவிலே முதன்முறையாக அதிக திறன் கொண்ட எதிர் சவ்வூடு பரவல் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சென்னையில் அமைக்கப்படுகிறது.

மணலி பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் பெரும்புதூர், ஒரகடம், இருங் காட்டுக்கோட்டை ஆகிய இடங்க ளில் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் கழுவு தல், குளிர்வித்தல், உற்பத்தி நடை முறைகள் (Processing) ஆகியவற் றிற்காக தினமும் 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால் மேற்சொன்ன அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப் படுகின்றன.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட மூன்றாம் நிலை தண்ணீர் ஒரு கிலோ லிட்டர் ரூ.120-க்கு விற்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நவீன முறையில் சுத்திகரிக்கப்படும் தண்ணீர்தான் சிங்கப்பூரில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x