Published : 03 Apr 2025 11:54 PM
Last Updated : 03 Apr 2025 11:54 PM
நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி பாசிசத்தை வீழ்த்துவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 2-வது நாளான நேற்று ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்குக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் நோக்க உரையாற்றினார்.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்குமிடையே கருத்தியல் நட்பு உண்டு. அதன் அடையாளமாகத்தான் இங்கு வந்திருக்கிறேன். நமது பயணமும், பாதையும் மிக நீண்டது. 2019 முதல் இணைபிரியாமல் இருக்கிறோம். யாரை எதிர்க்க வேண்டும், எதற்காக எதிர்க்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம்.
இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலர் நப்பாசையுடன் இருக்கிறார்கள். அவர்களது எண்ணம் நிறைவேறாது. கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒவ்வாமையாகி விட்டது. மத்திய அரசால் அதிகம் பாதிக்கப்படுவது நானும், கேரள முதல்வரும்தான். பல்வேறு சட்டங்கள் மூலம் மாநில உரிமைகளைப் பறிக்கிறார்கள். ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் நிதி உரிமையை எடுத்துக்கொண்டனர். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநில ஆளுநர்களை, பாஜக மாநிலத் தலைவர்கள்போல முழுநேர அரசியல்வாதியாகச் செயல்பட வைக்கிறார்கள். மாநிலங்களே இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியே பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா என்கிறது. அதனால்தான் ஒன்றிய அரசு என்கிறோம். இதையே அவர்களால் தாங்க முடியவில்லை. அதிகாரப் பரவலாக்கலை அவர்கள் விரும்பவில்லை. கூட்டாட்சித் தத்துவத்தை, தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறது பாஜக அரசு.
மாநில சுயாட்சி எங்கள் உயிர்க் கொள்கை. கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. இதை நாம் வீழ்த்தியாக வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் நாட்டில் சுயாட்சி காப்பாற்றப்படும். மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சியின் முடிவில்தான் கூட்டாட்சி மலரும். அதற்காக நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டிப் போராடி, பாசிசத்தை வீழ்த்துவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினர்.
ஜனநாயகத்தை பாதுகாக்க... கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமை தொடர்பாக அமைக்கப்பட்ட சர்க்காரியா, பூஞ்சி குழுவின் பரிந்துரைகளை இதுவரை அமல்படுத்தாதது ஏன்? கூட்டாட்சித் தத்துவம் என்பது மிக முக்கியமானது. மத்திய அரசின் விளம்பரதாரர்போல மாநில அரசு செயல்பட முடியாது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. மாநில அரசுகள் பெரும்பாலான விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து வசதியானவர்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்கி வருகிறது.
உயர்கல்வியில் மாநில அரசுகள் அதிக பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. சங் பரிவார் அமைப்புகள் உயர்கல்வி நிலையங்களில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. மாநில பல்கலைக்கழகங்களில் தன்னிச்சையாக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குப் பரிசாக, அவற்றின் தொகுதிகளைக் குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதனால் உரிமைகள், தேவைகளைப் பெறுவதில் சிக்கல் எழும் நிலை உருவாகியுள்ளது. கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளை அனைவரும் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT