Published : 12 Jul 2018 07:51 AM
Last Updated : 12 Jul 2018 07:51 AM

தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் சேர்க்க ஜூலை 15-ல் ஆயிரம் இளைஞர்கள் சைக்கிள் பயணம்: கிராமங்களில் இரவில் தங்கி பிரச்சாரம்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதிய முயற்சி

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை மக்களிடம் சேர்க்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆயிரம் இளைஞர்கள் சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர். இப்பயணத்தை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரும் ஜூலை 15-ல் மதுரையில் தொடங்கி வைக்கின்றனர்.

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு தனது ஓராண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக 1,000 இளைஞர்கள் கிராமங்கள் தோறும் சைக்கிள் பயணம் மேற்கொள்ளவும், கிராமங்களிலேயே தங்கி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டம், அதிமுக மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளரான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற உள்ளது. ஜூலை 15-ம் தேதி மதுரையில் இந்தப் பிரச்சாரப் பயணத்தை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியது: திட்டத்தின் தொடக்க விழாவில் 25,000 இளைஞர்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து 1,000 இளைஞர்கள் கிராமங்கள்தோறும் சைக்கிளில் பயணம் செய்கின்றனர். அவர்களுடன் நானும், எம்எல்ஏக்கள் உட்பட கட்சி நிர்வாகிகளும் செல்கின்றோம். இளைஞர்களுடன் நானும் கிராமங்களில் இரவில் தங்குகிறேன். அங்குள்ள கட்சி தொண்டர்களின் வீடுகளில் உணவருந்தி, அங்கேயே தூங்குவோம். மறுநாள் காலையில் மீண்டும் பயணத்தை தொடர்வோம்.

திண்ணை பிரச்சாரம்

தமிழக அரசு கடந்த ஓராண்டில் காவிரி வழக்கில் வெற்றி பெற்றது, காவிரி ஆணையம் அமைத்தது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக உத்தரவை பெற்றது, ஜல்லிக்கட்டில் வெற்றி, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட்டை மூடியது, 2,000 ஆண்டுகளுக்குப்பின் குடிமராமத்துப் பணியை மேற்கொள்வது, விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்குவது, பல லட்சம் கோடி ரூபாயில் கிராமத்து சாலைகள், இலவச பட்டா உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்குவதை ஆன்லைன் முறைக்கு மாற்றியது, எளிதாக ஸ்மார்ட் கார்டு பெறுவது என பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. இவற்றை துண்டு பிரசுரங்களாக வழங்கி மக்களிடம் விளக்கப்படும். இதற்காக இளைஞர்கள் வீடுகள்தோறும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வர்.

அரசின் சாதனைகளை மறைக்கவும், இருட்டடிப்பு செய்வதிலும் எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன. இதனை முறியடிப்பதே இப்பயணத்தின் நோக்கம். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் இந்தப் பயணம் நடக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x