

ராமநாதபுரம்: பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதிகளில் "அண்ணாமலைதான் வேண்டும், அதிமுக கூட்டணி வேண்டாம்" என்று ஒட்டப்பட்ட சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட வேண்டுமெனில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமாலையை நீட்டிக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அண்ணாமலையை வேறு பதவிக்கு மாற்ற பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளன.
அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக உள்ள சரவணன் "வேண்டும்.. வேண்டும்... அண்ணாமலை வேண்டும், வேண்டாம்.. வேண்டாம்.. அதிமுக கூட்டணி வேண்டாம்.." என்ற சுவரொட்டிகளை முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் ஒட்டியுள்ளார். இந்த சுவரொட்டி பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாவட்டச் செயலாளர் சரவணனிடம் கேட்டபோது, "கடுமையாக உழைத்து, பாஜகவை வளர்த்தார் அண்ணாமலை. அவரது அரசியல் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. திமுகவை கடுமையாக எதிர்க்க அவர் தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக நீடிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக தொடர்ந்து வளர வேண்டுமெனில் தலைவராக அண்ணாமலை நீடிக்க வேண்டும். இதை கட்சித் தலைமை உணர்ந்து செயல்பட வேண்டும். இதை வெளிப்படுத்தும் வகையில்தான் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளேன்" என்றார்.