புதிய பாம்பன் ரயில் தூக்குப் பாலம் 100 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும்

புதிய பாம்பன் ரயில் தூக்குப் பாலம் 100 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும்
Updated on
1 min read

மதுரை: ராமேசுவரம் பாம்பனில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் 100 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் என்று ரயில்வே பாலம் கட்டுமான நிறுவன ஆலோசகர் அன்பழகன் கூறினார்.

மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து, ராமேசுவரம் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் பாம்பன் கடல் நடுவே புதிதாக தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவடைந்தன. பின்னர், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து, பாலத்தில் ரயிலை இயக்க பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து, பாலத்தில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு, பயணிகள் போக்குவரத்துக்கு சான்றிதழ் பெறப்பட்டது.

புதிய பாம்பன் பால கட்டுமானப் பணிகள் குறித்து ஆர்விஎன்எல் நிறுவன ஆலோசகர் அன்பழகன் கூறியதாவது: நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தப் புதிய பாலம், தொடர் பராமரிப்பு காரணமாக 100 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும். பாலத்தின் நடுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் தொழில்நுட்பம் நாட்டிலேயே முதல்முறையாக பாம்பனில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாம்பன் பாலத்தில் தற்போது 75 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நடுப்பகுதியில் மட்டும் 50 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும். பழைய பாம்பன் பாலத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in