Published : 02 Apr 2025 04:52 AM
Last Updated : 02 Apr 2025 04:52 AM

கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலை, கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு, மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்துடன், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதை தடுக்க முடியும். அதன்படி, தமிழகத்தில், தஞ்சாவூர் கலைத்தட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிப் பட்டு, மதுரை மல்லிகை, திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய் என பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. அந்த வகையில், தற்போது கும்பகோணம் வெற்றிலை, குமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவுசார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி, தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2022 ஜன. 13-ம் தேதி தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கும்பகோணம் வெற்றிலைக்கும், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் தோவாளை மாணிக்க மாலை கைவினை கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது இவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பொருட்கள் உட்பட தமிழகத்தில் இதுவரை 62 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கும்பகோணம் வெற்றிலை: பாரதியார் தனது கவிதையில், ‘கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என பாடியுள்ளார். ராதாநல்லூர், திருக்காம்புலியூர் கல்வெட்டுகளில் காவிரிப் படுகை வெற்றிலையின் சிறப்புகள் குறித்து கூறப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் தண்ணீர், மண்வளம் தான் கும்பகோணம் வெற்றிலைக்கு சிறப்பு சேர்கிறது. இவை, மருத்துவ குணம், மிதமான காரத்தன்மை கொண்டவை என வேளாண் துறை ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

தோவாளை மாணிக்க மாலை: வங்கக்கடன் மற்றும் அரபிக் கடல் காற்று, மேற்கு தொடர்ச்சி மலை சூழல் போன்றவற்றால் தோவாளை மலர் தனிச் சிறப்பு பெற்றுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு அரளி, பச்சை நொச்சி, சம்பா நாறு கொண்டு பாய் போன்று உருவாக்குவதால் இந்த மாலை மாணிக்கம் போன்று காட்சியளிக்கிறது. இந்த மாலை 140 ஆண்டு வரலாறு கொண்டது. ஒரு மாலை கட்ட சுமார் 5 மணி நேரமாகும். 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இந்தியாவில் பூ மாலைக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x