Published : 03 Jul 2018 08:06 AM
Last Updated : 03 Jul 2018 08:06 AM

ஸ்டெர்லைட் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ரசாயன பொருள் அகற்றும் பணி தொடக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து ரசாயன பொருட்களையும் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் கசிவு இருப்பது கடந்த மாதம் கண்டறியப்பட்டது. கொள்கலனில் இருந்த கந்தக அமிலம் முழுவதுமாக அகற்றப்பட்டது.

இதுதவிர மேலும் சில ரசாயன பொருட்கள் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த ரசாயன பொருட்களையும் அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உயர்மட்டக் குழுவை அமைத்தது.

இந்தக் குழு ஆய்வுக்கு பிறகு சமர்ப்பித்த அறிக்கையின்படி, ஸ்டெர்லைட் ஆலையில் பாஸ்பாரிக் அமிலம், எல்பிஜி, டீசல், தாமிர தாது, ஜிப்சம், திரவ ஆக்ஸிஜன், திரவ நைட்ரஜன் போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு மாதத்தில் அகற்றம்

இந்த ரசாயனம் மற்றும் மூலப்பொருட்களை 30 நாட்களுக்குள் பாதுகாப்பாக அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜிப்சம் மட்டும் அதிகமாக இருப்பதால் கூடுதல் நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசாயன பொருட்களை பாதுகாப்பாக வெளியேற்றி, வேறு நிறுவனங்களுக்கு அவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது. ரசாயன பொருட்கள் எவ்வளவு இருக்கின்றன என்ற விவரம் தெரியவில்லை. இந்த பணிகளை அரசு நிர்ணயித்த காலத்துக்குள் முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x