‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கான நிதியைப் பெற நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்

‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கான நிதியைப் பெற நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்
Updated on
1 min read

சென்னை: “காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது”, என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

பேரவையில் இன்று (ஏப்.1) கேள்வி நேரத்தின்போது,திருச்செங்கோடு உறுப்பினர் ஈஸ்வரன், “கழிவு நீரால் மாசுபட்டுள்ள காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்துவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு ‘நடந்தாய் வாழி காவிரி திட்டம்’ தீட்டப்பட்டது. மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்புடன் தீட்டப்பட்ட இந்த திட்டத்தில்,மாநில அரசின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசுகையில், ‘நடந்தாய் வாழி காவிரி திட்டம்’ காவிரி மற்றும் அதன் ஐந்து கிளை ஆறுகளான, திருமணிமுத்தாறு, தரபங்கா, அமராவதி, பவானி மற்றும் நொய்யல் மாசுபடுவதில் இருந்து பாதுகாத்தல்,புத்துயிர் பெறச் செய்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தினை இரண்டு கட்டங்களாக, கட்டம் ஒன்று காவிரி ஆறு மேட்டூரில் இருந்து திருச்சி வரையிலும், மற்றும் அதன் ஐந்து கிளை ஆறுகள்.இரண்டாவது கட்டம் திருச்சியில் இருந்து கடல் முகத்துவாரம் வரை எனவும் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது.

கட்டம் ஒன்று மொத்த திட்ட மதிப்பீடு ரூ.934.30 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம். அதாவது ரூ.560.58 கோடி. மாநில அரசின் பங்கு 40 சதவீதம். அதாவது ரூ.321.72 கோடி. இதற்கான நிதியினைப் பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in