

சென்னை: அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், ரயில்வேயில் முதல் கட்டமாக, 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
இவற்றில், தெற்கு ரயில்வேயில், சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்துார், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, திரிசூலம், குரோம்பேட்டை உட்பட 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் வகையில், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மின்தூக்கி, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங், சிசிடிவி கேமிரா உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெறும்.
சென்னை ரயில் கோட்டத்தில் 17 ரயில் நிலையங்களிலும் சராசரியாக 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. பரங்கிமலை, சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, ஏப்ரல் மாதத்தில் இந்த 2 ரயில் நிலையங்களையும் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.