கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை | ரூ.80 பார்க்கிங் கட்டணம் வசூலித்த வணிக வளாகம்: வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு

Published on

சென்னை: வாடிக்கையாளரிடம் ரூ.80 பார்க்கிங் கட்டணமாக வசூலித்த தனியார் வணிக வளாகம், அவருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொசபேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு சென்றபோது தனது இருசக்கர வாகனத்தை வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றார்.

இந்நிலையில், அங்கு 1 மணி 57 நிமிடம் வாகனத்தை நிறுத்தியதற்காக அவரிடம் இருந்து ரூ.80 பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அருண்குமார் புகார் மனு தாக்கல் செய்தார்.

சென்னை: அந்த மனுவில், “தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள்படி பெரும் வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிடம் செய்து தர வேண்டியது அவசியம். வாகன நிறுத்துமிடம் என்பது வணிக வளாகத்தின் ஒரு பகுதியாகும்.

இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்க முடியாது. என்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வர்த்தகமாகும். எனவே, எனக்கு இழப்பீடும், வழக்கு செலவுக்கான தொகையையும் வழங்க வணிக வளாக உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது வணிக வளாகத்தின் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “கட்டிட விதி, வணிக வளாகங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட வேண்டும் என கூறினாலும், அங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. அதன்படி பார்க்கிங் கட்டணம் வசூலிக்க எந்த தடையும் இல்லை” என தெரிவித்தனர்.

மனுவை விசாரித்த ஆணையம், “பெரும் வணிக வளாகங்களில் கழிப்பறை, எஸ்கலேட்டர், லிஃப்ட் போன்ற அடிப்படை வசதிகள் வரிசையில் வாகன நிறுத்துமிடமும் பட்டியலில் வருமா? என்ற கேள்விக்கு தமிழ்நாடு கட்டிட விதிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மட்டுமே விடைகாண முடியும். ஆனால், அதற்கு இந்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.

அதேநேரம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடர்பான விதிகள் எதையும் வணிக வளாக நிர்வாகம் தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம், மனுதாரரிடம் வாகன கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வர்த்தகம் என்ற முடிவுக்கு இந்த ஆணையம் வருகிறது.

எனவே திருமங்கலத்தில் உள்ள சம்பந்தப்பட்ட வணிக வளாகம், வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் நியாயமற்ற வர்த்தகம் மூலம் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in