ரூ.32 கோடியில் மறுசீரமைக்கப்படும் விக்டோரியா அரங்கம்: பணிகளை விரைந்து முடிக்க மேயர் பிரியா அறிவுறுத்தல்

ரூ.32 கோடியில் மறுசீரமைக்கப்படும் விக்டோரியா அரங்கம்: பணிகளை விரைந்து முடிக்க மேயர் பிரியா அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.32 கோடியில் மறுசீரமைக்கப்பட்டு வரும் விக்டோரியா பொது அரங்க பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க மேயர் ஆர்.பிரியா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில், ரிப்பன் மாளிகை அடுத்துள்ள விக்டோரியா பொது அரங்கம் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.32.62 கோடியில், அதன் தொன்மை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். முன்னதாக திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர், முரசொலி மாறன் பூங்காவை மேம்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் மேயர் ஆர்.பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: விக்டோரியா பொது அரங்கத்தை பழமை மாறாமல் மறுசீரமைக்கும் பணியை கடந்த 2023-ம் ஆண்டு துணை முதல்வர் உதயநிதி தொடங்கிவைத்தார். இப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய நீதிக்கட்சி தொடங்கிய இடம் இந்த விக்டோரியா பொது அரங்கம்தான்.

இந்த அரங்கில் என்னென்ன சிறப்புகள் இருந்ததோ, அவற்றை பொதுமக்கள் அறியும் வகையில் அருங்காட்சியகமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு கலையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in