சீன நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழகம் இழந்துள்ளது: பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்

சீன நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழகம் இழந்துள்ளது: பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: சீன கார் நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்திருப்பது தமிழகத்தின் திறன் குறைந்து வருவதை காட்டுவதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சீனாவைச் சேர்ந்த மின்சார கார் நிறுவனமான பி.ஒய்.டி ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது கார் உற்பத்தி ஆலையை ஹைதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்துக்கு இந்த கார் ஆலையை கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது.

இந்த ஆலையை கொண்டு வர தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்கள் போட்டியிட்டன. இந்த மாநிலங்களில் தமிழகத்துக்கு தான் அதிக வாய்ப்புகள் இருந்தன. அதற்குக் காரணம், 2019-ம் ஆண்டிலேயே இந்நிறுவனம் ரூ.2,800 கோடியில் ஆலையை அமைத்திருந்தது. ஆனால், அந்த நிறுவனத்தை தமிழகத்துக்கு கொண்டு வர அரசால் முடியவில்லை. உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தை விட்டு தெலங்கானாவுக்கு சென்றிருப்பது கவலை அளிக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தமிழகத்தின் திறன் குறைந்து வருவதையே இது காட்டுகிறது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் இருந்தே நடப்பாண்டு தமிழகம் நீக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலுக்கான 30 சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை. தொழில் முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழகத்தின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in