சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி: சீமான் திட்டவட்டம்

சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி: சீமான் திட்டவட்டம்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 13 ஆண்டுகளாகியும் இன்னும் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை. இதேபோல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல வழக்குகளில் காவல் துறை முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவில்லை. இவற்றில் காலதாமதம் செய்து, அரசுக்கும், அதிகாரத்துக்கும் எது தேவையோ, அதை மட்டும் செய்து வருகிறார்கள். மற்றவற்றை மூடி மறைத்து விடுகிறார்கள்.

அதிகாரத்தில் உள்ளவர்களின், ஆளுங்கட்சிகளின் கிளைக் கழகங்களாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. நீதிமன்றம் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல, அரசியல் போராளிகள். எனவே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடமாட்டோம். தனித்தே போட்டியிடுவோம். கூட்டத்துடன் நிற்க துணிவோ, வீரமோ தேவையில்லை. தனித்து நிற்கத்தான் துணிவும் வீரமும் அவசியம்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு திமுகவை வீழ்த்துவேன் என்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். எதிரியைத் தீர்மானித்து விட்டுத்தான் நாங்கள் களத்தில் இறங்கி உள்ளோம். எங்களுக்கு எந்த குழப்பமோ, தடுமாற்றமோ கிடையாது. இன்னும் சில மாதங்களில் நாங்கள் எங்கே நிற்கிறோம், மற்றவர்கள் யார் யாருடன் இணையப் போகிறார்கள் என்பதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in