‘நீட்’ ரத்தை உறுதி செய்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாரா? - அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு | கோப்புப்படம்
அமைச்சர் தங்கம் தென்னரசு | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜக உடன் கூட்டணி வைக்க அதிமுக தயாரா?” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்தியில் இண்டியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று திமுக தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தியையும் அளிக்கச் செய்திருந்தார்.

டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று ‘பிரத்யேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை’ என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே, பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார்.தமிழகத்தின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?”

இபிஎஸ் கூறியது என்ன? - முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, “நீட் என்ற தேர்வை நாட்டுக்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க அடித்தளம் இட்டதோடு அல்லாமல், ‘ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழகத்தில் இருக்காது’ என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுகவுக்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?

இதுவரை நாம் இழந்த 19 மாணவர்களின் உயிர்களுக்கும் மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன? உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? மாணவி தர்ஷினி மரணத்துக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசே முழு பொறுப்பு.
அதேநேரம், மாணவர்களும் எதற்காகவும் இன்னுயிரை இழக்கத் துணியக் கூடாது. வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது. வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. ‘நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்ல வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in