95% தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளில் சட்ட சிக்கல் இல்லை; எளிதாக பேசி தீர்க்கலாம்: ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு யோசனை

சென்னை தொழிலாளர் சட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வரும் மூத்த உறுப்பினர்கள் எஸ்.செந்தில்நாதன், எஸ்.ஆறுமுகத்துக்கு பாராட்டு விழா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு ஆகியோர் பங்கேற்று பரிசு வழங்கி கவுரவித்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை தொழிலாளர் சட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வரும் மூத்த உறுப்பினர்கள் எஸ்.செந்தில்நாதன், எஸ்.ஆறுமுகத்துக்கு பாராட்டு விழா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு ஆகியோர் பங்கேற்று பரிசு வழங்கி கவுரவித்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
Updated on
1 min read

சென்னை: 95 சதவீத தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளில் அதிக சட்ட சிக்கல்கள் இருப்பதில்லை என்பதால் அந்த வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலமாக எளிதாக பேசித் தீர்க்கலாம் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு யோசனை தெரிவித்துள்ளார்.

சென்னை தொழிலாளர் சட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர்களாகப் பணிபுரிந்து வரும் மூத்த உறுப்பினர்கள் எஸ்.செந்தில்நாதன், எஸ்.ஆறுமுகத்துக்கு பாராட்டு விழா மற்றும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் படத்திறப்பு விழா, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவில் சங்க துணைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் கே.எம்.ரமேஷ் வரவேற்றார். சங்க கவுரவத் தலைவர் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தலைமை வகித்தார். மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் உருவப்படத்தை நீதிபதி சுந்தர் மோகன் திறந்து வைத்தார். சங்கத் தலைவர் எஸ்.அய்யாத்துரை, கவுரவத் தலைவர் எஸ்.ரவீந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். வழக்கறிஞர்கள் எஸ்.செந்தில்நாதன், எஸ். ஆறுமுகம் ஏற்புரை நிகழ்த்தினர்.

விழாவில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு பேசும்போது, ‘‘தொழிலாளர் சட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை நாங்கள் தொடங்கிய காலகட்டத்தில், நிலுவை வழக்குகளைக் குறைக்க மக்கள் நீதிமன்றங்களை தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து நடத்தி தொழிலாளர்களின் நலன் சார்ந்த நிலுவை வழக்குகளை வெகுவாக குறைத்தோம்.

ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. 95 சதவீத தொழிலாளர் நல வழக்குகள் பேசி தீர்ப்பவையாகத்தான் உள்ளன. அதில் அதிக சட்ட சிக்கல்கள் இருப்பதில்லை. அதுபோன்ற வழக்குகளை நாமே மக்கள் நீதிமன்றம் நடத்தி பேசித் தீர்க்கலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளான வி.ஆர்.கிருஷ்ணய்யரும், சின்னப்ப ரெட்டியும் சாமானிய உழைக்கும் மக்களின், தொழிலாளர்களின் குரலாக, உச்ச நீதிமன்றத்தில் ஜொலித்தவர்கள். அவர்கள் ஆற்றிய பணியை, பங்களிப்பை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,

புதிய தொழிலாளர் சட்டம்: தற்போதுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதேநேரம் 1947 முதல் உள்ள தொழில் தகராறு சட்டத்தில் உள்ள முரண்பாடுகளையும் களைய வேண்டும். தாராள மயம், தனியார் மயம் மற்றும் உலகமயம் என்ற மூன்று மயங்களால் தொழிலாளர் நலன் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

இன்றைய இளம் வழக்கறிஞர்கள் முதலாளித்துவத்துக்கு செவி சாய்க்காமல் சோஷலிசத்துக்கு குரல் கொடுக்க வேண் டும்’’ என்றார். விழாவில் தொழிலாளர் சங்க வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in